திருநெல்வேலி, ஏப்ரல்.8-
பாளையங்கோட்டயை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் அன்பு(வயது 32). கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் பாலமுருகன்(18) என்ற வாலிபரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
அன்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அன்புவும், பாலமுருகனும் நொச்சிகுளத்தில் உள்ள ஒரு கலையரங்கம் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பாலமுருகனின் செல்போனை அன்பு எடுத்து வைத்துக்கொண்டு அதனை திருப்பி கொடுக்காமல் விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது. செல்போனை திருப்பி கொடுக்குமாறு அவரிடம் பாலமுருகன் பலமுறை கேட்டும், அவர் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அரிவாளால் அன்புவை சரமாரி வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அன்பு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இன்று காலை கலையரங்கம் பகுதியில் சென்றவர்கள் அன்பு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அன்பு உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment