நெல்லை - மதுபோதையில் பயணம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மோதல்.
நெல்லை, மே.23, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மே.22 காலை சென்னையில் இருந்து வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதில் சிலர் மதுபோதையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டது. அந்த ரெயில் நெல்லை சந்திப்புக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது. அப்போது, அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்த கார்டு பைஜூ, பயணிகளை எச்சரித்தார்.
பின்னர் 9 மணி அளவில் மீண்டும் ரெயில் புறப்பட்டது. அப்போது பயணிகள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நெல்லை மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வந்ததும், ரெயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஜசில் ஜமால் (வயது 35) என்பதும், மேலும் ஒரு வாலிபர், 2 இளம்பெண்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள், சக பயணிகள் தாக்கியதில் 2 பேருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், 2 பேர் லேசான காயம் அடைந்ததாகவும் கூறினார்கள். இதையடுத்து போலீசார், 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரெயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment