வள்ளியூர், நவ.16: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகளை முன்னாள் தங்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்திடமிருந்து மீட்டு தரவேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புதிய தர்மகர்த்தா சூ.மரியராஜ் மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
தெற்குகள்ளிகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் பரிசுத்த அதிசய பனிமாதா கோயில் உள்ளது. தமிழக அரசின் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திருத்தலத்தில் அதிசய பனிமாதாவுக்கு அணிவிக்கக்கூடிய மூன்றேகால் கிலோ தங்க ஆபரணங்கள் உள்ளது.
இந்நிலையில் கடந்த 27}ம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சூ.மரியாஜ் சங்க தலைவராகவும் அதிசய பனிமாதா கோயில் தர்மகர்த்தாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தர்மகர்த்தாவிடம் முன்னாள் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் அதிசய பனிமாதா கோயிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மற்றும் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக ஒப்படைக்கவில்லை. இதனை அடுத்து இது தொடர்பாக தர்மகர்த்தா சூ.மரியாராஜ் திருநெல்வேலி மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவர் நாடார் மகமை சங்க தேர்தலில் நான் தலைவராகவும் என்னோடு 8 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தின் தலைவர் தான் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தின் தர்மகர்த்தாவும் ஆவார்.
எனது தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியேற்றப்பின்னர் முன்னாள் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் முறையாக சங்கத்தின் வரவு செலவு கணக்குகளையும் பரிசுத்த அதிசய பனிமாதாவுக்கு அணிவிக்கக்கூடிய மூன்றே கால் கிலோ தங்க நகைகள் மற்றும் அவரது பதவி காலத்தில் கோயிலுக்கு வந்த தங்க நகைகள் மற்றும் கணக்குகளை ஒப்படைக்கவில்லை. தீர்மான புத்தகம், அலுவலக சாவி, பீரோ சாவிகளையும் ஒப்படைக்கவில்லை.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிசய பனிமாதா கோயில் தங்க நகைகளை முன்னாள் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்திடமிருந்து மீட்டுத் தருமாறும் சங்கத்தின் அனைத்து ஆவணங்களையும் பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment