முடிவுக்கு வந்தது தூத்துக்குடியின் 144 ஆண்டு கால வரலாறு. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 December 2024

முடிவுக்கு வந்தது தூத்துக்குடியின் 144 ஆண்டு கால வரலாறு.

தூத்துக்குடியில் 144 ஆண்டு கால வரலாறு படைத்த புகழ்பெற்ற மதுரா கோட்ஸ் மில் நிறுவனம் அனைத்து வகையான பணிகளும் முடிவுக்கு வந்தது. 

1970 களில் அரசு வேலையை நிராகரித்து விட்டு இருமடங்கு சம்பளம் இந்த மில்லில் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையை நம்மால் மறக்கவே முடியாது. இவர்கள் கூட்டமாக வேலைக்கு செல்லும் அழகே தனி. மேலும் ஹார்வி மில்லில் (மதுரா கோட்ஸில்) வேலை பார்த்தால் பெண் கொடுத்து கல்யாணம் சீரும், சிறப்புடன் நடத்தி வாழ்ந்த எல்லா சமுதாயத்தின் - குடும்பங்கள் - பல ஆயிரங்கள் - இந்த ஊரில் பசுமையான நினைவுகளோடு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மணிக்கும் சைரன் ஒலி (ஊத்தம்) எழுப்பும் போதெல்லாம் தூத்துக்குடி மக்கள் வீட்டில் இருந்தபடியே அன்றைய தின நடப்பு நேரத்தை எளிதில் தெரிந்து கொள்வார்கள். இதைக்கேட்டு தூத்துக்குடி மக்கள் அன்றைய அவர்களது பணிகளை திட்டமிட்டு செய்து கொள்ளவார்கள். மில் தொழிலாளர்கள் பலரும் மில் கேன்டீனில் கிடைத்த தரமான குறைந்த விலை உணவு, சிற்றுண்டிகளையும் அன்று ரசித்து உண்ண முடிந்தது‌ . 

அதில் சாம்பார் வடையை மறக்கவே முடியாது . இதை மில் தொழிலாளர்கள் மறக்கவும் மாட்டார்கள். புகழ் பெற்று விளங்கிய மதுரா கோட்ஸ் மில் 144 ஆண்டுகள் கழித்து இந்த மண்ணை விட்டும், நம் மாநகர மக்களை விட்டும் பிரிந்து - மறைவது - நம்மால் மறக்க முடியாத நினைவுகளை விட்டு செல்கிறது . 

இந்நிறுவனத்தில் ஐஎன்டியுசி., என்எல்ஓ., திமுக., தொழிற்சங்கங்கள் மில்லுக்கு எதிரிலேயே சங்ககட்டிடங்கள் வைத்து தொழிலாளர்களின் பல தொழில் தாவாக்களுக்கு தீர்வு கண்டுள்ளார்கள் என்பதும் சரித்திர உண்மை. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த மற்றொரு தனியார் நிறுவனமான - ஸ்பின்னிங் மில் - சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த மண்ணை விட்டு வெளியேறியது, தற்போது மற்றொரு மில்லான மதுரா கோட்சும் வெளியேறிவிட்டது. இதை நம்பி வாழ்ந்த தொழிலாளர்களின் நிலமை இன்று கேள்விக்குறியாகிவிட்டதே. தூத்துக்குடியின் வளர்ச்சியில் மதுரா கோட்ஸின் பங்களிப்பு - வரலாற்றில் - பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். 

No comments:

Post a Comment

Post Top Ad